tamilkalangiyam

இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.
Saturday, 16 October 2010
இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் நமது விளையாட்டு வீரர்கள்.
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். அன்றைய சோவியத் யூனியனில் பிரதமராக இருந்த நிக்கோலஸ் புல்கானின் இந்தியாவுக்கு அரசு விருந்தினராக வந்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு மாஸ்கோ திரும்பும்முன் பத்திரிகை நிருபர்கள் அவரைப் பேட்டி கண்டனராம். ""இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்ட உங்களுக்கு எங்கள் நாட்டைப் பற்றி என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது?'' ""நான் ஒரு பொதுவுடமைவாதி. இந்தியாவுக்கு வரும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் வந்தேன். ஆனால் மாஸ்கோ திரும்பும்போது "கடவுள்' பற்றி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்ற பிரதமர் நிக்கோலஸ் புல்கானினின் பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது. ""எங்கள் இந்தியக் கோயில்களையும், புனிதத்தலங்களையும் பார்த்ததால் பக்தி ஏற்பட்டு நீங்கள் ஆத்திகவாதியாக மாறிவிட்டீர்களா?'' என்று நிருபர்கள் அவரை கேலியாகக் கேட்டபோது, பிரதமர் புல்கானின் சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம். ""அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரு தேசம் இயங்குவதற்குத் திறமையும் கொள்கைப் பிடிப்பும் தேசப்பற்றும் தியாக மனப்பான்மையும் உள்ள தலைவர்கள் வேண்டும். நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். முறையான வழிகாட்டுதலும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இல்லாத தலைமையால் ஒரு தேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது. இங்கே உங்கள் இந்தியாவில் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தலைவர்களையும் தவிர வேறு யாருக்குமே அப்படிப்பட்ட உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது என்றால் ஒருவேளை கடவுள் செயலாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். அவ்வளவே!'' பிரதமர் நிக்கோலஸ் புல்கானினின் பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டார்களாம். இது நிஜ சம்பவமா, இல்லை நமது இந்திய மெத்தனத்தை கேலி செய்ய நாமே உருவாக்கிய நகைச்சுவை துணுக்கா என்று தெரியவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைப் பட்டியலைப் பார்த்தபோது எப்போதோ படித்த இந்த நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வந்தது. நிக்கோலஸ் புல்கானின் தெரிந்துகொள்ளாத, காமன்வெல்த் போட்டிகள் நிரூபித்திருக்கும் விஷயம் என்னவென்றால் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் தவறுகளையும் மீறி இந்தியா ஒளிர்வதற்குக் காரணம் நமது மனித வளத்தின் ஆற்றல்தான் என்பது! 1934-ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்ற இந்தியா, 76 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பதக்கப் பட்டியலில் 38 தங்கப் பதக்கங்களையும் 27 வெள்ளிப் பதக்கங்களையும் 36 வெண்கலப் பதக்கங்களையும் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால், பாராட்டு முழுமையாக நமது விளையாட்டு வீரர்களை மட்டுமே சாரும். அடுத்தபடியாக இந்த இளம்வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்த உயர்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர்களைத்தான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. 1966-ல் வெறும் 10 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்த இந்திய விளையாட்டு அணி கடந்த 2006 போட்டிகளில் 49 பதக்கங்களை வெல்ல முடிந்தது. இப்போது 49 என்கிற பதக்க எண்ணிக்கை 101 ஆக அதிகரித்திருப்பதை நாம் கரவொலி எழுப்பி பாராட்ட வேண்டும். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல்முறையாகத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது தட, களப் போட்டிகள்தான். 1958-ல் நடந்த 6-வது காமன்வெல்த் போட்டிகளில் "பறக்கும் சீக்கியர்' என்று பாராட்டப்படும் மில்கா சிங் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அரை நூற்றாண்டுக்குப் பின்னும் நாம் தட, களப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களைத்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஒருகாலத்தில், ஹாக்கி என்று சொன்னால் இந்தியா என்றிருந்த நிலைமைபோய் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டிருக்கிறோம். சர்க்கஸ் கம்பெனிகளில் அற்புத சாகசங்களை நிகழ்த்தும் சிறுமிகள் இந்தியாவில் இருந்தும் நாம் இன்னும் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் திறமையின்மையல்ல. திறமைகள் முறையாகவும் முனைப்பாகவும் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, உலகத் தரமான வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டு போட்டிகளுக்கு அனுப்பப்படாததுதான். விளையாட்டு என்பதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். பொறியியல் கல்லூரிகளை நிறுவி கணினிப் பொறியாளர்களையும், மருத்துவக் கல்லூரிகளை நிறுவி மருத்துவர்களையும் உருவாக்குவதுபோல, விளையாட்டையும் முன்னுரிமையுள்ள துறையாக நாம் மாற்றியாக வேண்டும். விளையாட்டு வீரர்களுக்குப் பெருமையும், அங்கீகாரமும் வாழ்க்கை வசதிகளும் கிடைக்க உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களும் அதை ஊக்குவிப்பார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலையும் மீறி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது என்னும்போது நிம்மதிப் பெருமூச்சு வருகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரங்கேற்றிய குளறுபடிகளைப் பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் நமது விளையாட்டு வீரர்கள். அவர்களுக்கு நமது ஆனந்தக் கண்ணீரால் நன்றி செலுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!
Thursday, 14 October 2010
மெய் "சிலி'ர்க்கிறது! சிலி
கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்! இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும். சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று. அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு. இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர். வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான். நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர். என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன. 1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம். இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
Sunday, 10 October 2010
மனித மூளை
சுஜாதா (அற்புதமான கட்டுரை)[ மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன. ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]ஒரு விமர்சனம் - ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு. குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,
நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,
ஊசிக்காதில் நூலைச் செருகுவது,
கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,
உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை! ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.
40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம். உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?
ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் "இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்" என்றார். "மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி." என்றார்.
இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.
அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்! உலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.
இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.
இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.
சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).
ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).
ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!
தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.
ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.
மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.
எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!
நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!
கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...
மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.
ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.
சராசரி மனிதன் 1349 கிராம்.
அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.
மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.
பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!
மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.
முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.
பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.
முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.
இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.
இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!
சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!
முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.
இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!
இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.
தாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.
எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.
நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.
குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடும்.
புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.
வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.
ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.
Saturday, 2 October 2010
பெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்
நவுக்ரி என்ற பெயரை சேர்த்து கொண்டு வேறு சில வேலை வாய்ப்பு இணையதளங்களூம் இருக்கின்றன.நவுக்ரி இந்தியா,நவுக்ரி ஹப்,நவுக்ரி கல்ப்,நவுக்ரி குரு என நவுக்ரியை உடன் சேர்த்து கொண்டுள்ள தளங்களுக்கு பெரிய பட்டியலே போடலாம்.
வேலை வாய்ப்பு தளங்களின் அடையாளமாக நவுக்ரி.காம் விளங்குவகதால் இப்படி எல்லோரும் நவுக்ரியை ஒட்ட வைத்து கொண்டு விடுகின்றனர்.அதோடு நவுக்ரி என்னும் சொல்லுக்கு இந்தி மொழியில் வேலை என்ற பொருள் இருப்பதும் இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
ஆனால் பெண்களுக்கான நவுக்ரி தளத்தை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது.ஒரு வெற்றிகரமான தளத்தை போலி செய்து துவக்கப்பட்ட தளமாக இல்லாமல் தனித்துவம் மிக்க தளமாக நவுக்ரி பார் வுமன் விளங்குகிறது.
பெண்களுக்கான பிரத்யேக வேலை வாய்ப்பு இணையதளம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு.அதாவது வேலை வாய்ப்பு தளங்களில் ஒரு மகளிர் மட்டும் தளம்.
ஆணும் பெண்ணும் சரி சமாமாக போட்டியிடும் காலத்தில் பெண்களுக்கான தனி வேலை வாய்ப்பு தளம் சரி தானா?தேவை தானா?என்று கேட்கலாம்.சரிய தவறா என்பது அவரவர் நிலைப்பாடு மற்றும் புரிதல் சார்ந்தது.ஆனால் தேவையா இல்லையா பொருத்தவரை தேவை என்றே தோன்றுகிறது.
பெண்கள் விஷேசமான திறமைகளை பெற்றிருப்பதாலும்,அவர்களின் பணியிட தேவைகள் ஆண்களின் தேவையில் இருந்து மாறுபட்டதாக இருப்பதாலும் பெண்களுக்கான தனி வேலை வாய்ப்பு தளம் அவசியம் என்று உணர்ந்து இதனை துவக்கியிருப்பதாக இந்த தளத்தில் குறீப்பிடப்பட்டுள்ளது.
சராசரியான வேலை வாய்ப்பு தளத்தை போல இந்த தளத்திலும் பகுதி வாரியாக வேலைகளை தேடுவதற்கான வசதியும் அதற்கு முன்பாக பயோ டேட்டாவை சமர்பிக்கும் வசதியும் இடம்பெற்றுள்ளன.அதே போல நிறுவனங்கள் தங்களின் வேலை வாய்ப்பு விவரங்களை சமர்பிக்கலாம்.
என்ன துறையில் எந்த நகரில் வேலை தேவை என குறிப்பிட்டு தேடும் வசதி இருக்கிறது.வீட்டில் இருந்தே பார்க்க கூடிய வேலை,பகுதி நேர வேலை போன்ற தேர்வுகளையும் செய்து கொள்ளலாம்.இந்த தேடலை மேலும் சுலபமாக்க சமீபத்திய வேலை மற்றும் சூடான வேலை(பிரபலாமாக இருப்பவை)என தனித்தனி தலைப்புகளிலும் வேலை வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுக்கும் தனி பகுதி உள்ளது.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் பெண்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் என்பதே.வேலை வாய்ப்பு மற்றும் பணி சூழல் தொடர்பான் சந்தேகங்களைம் கேள்விகளாக கேட்டு விளக்கம் பெறுவதற்கான விவாத பகுதி இதற்கு உதவுகிறது.
இந்த பகுதியில் உள்ள கேள்வி பதில்கள் மற்றும் ஆலோசனை குறிப்புகள் முதன் முதலாக வெளியே வரும் பெண்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
வேலை வாய்ப்பு தொடர்பான எந்த சந்தேகத்திற்கும் பெண்கள் இதன் மூலம் விளக்கம் பெறலாம்.
ஏலை வாய்ப்பு என்பதே பெண்களுக்கான மேம்பாட்டிற்கான் வழி என்ற நம்பிக்கையில் அதற்கு உதவும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் பின்னே உள்ள பிரியா மற்றும் புல்லக் மொகந்தி கூறுகின்றனர்.எல்லா பெண்களும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று தங்கல் குடுமபத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க உதவ வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று அவர்கள் சொல்கின்றனர்.
இந்த இருவரும் ஏற்கனவே மேம்சாப் என்னும் தளத்தை நடத்தி வருகின்றனர்.உலகம் ம் உழுவதும் உள்ள மேம்சாப்களை (திருமதிகள்)ஒன்றினைப்பதறகாக உருவாக்கப்பட்ட தளம் இது.
நவுக்ரியோடு இணைந்த தளங்களில் இன்னொரு குறிப்படத்தக்க தளமும் இருக்கிறது.சர்கார் நவுக்ரி என்னும் அந்த தளம் அரசு வேலைகளை பட்டியலிடுகிறது.
நவுக்ரி பெயரில் ஏகப்பட்ட தளங்கல் இருக்கலாம்.ஆனால் வேலை என்னூம் சொல்லில் பிரத்யேக தளங்கள் இல்லை.யாராவது வேலை.காம் என தமிழில் தமிழனுக்கான வேலை வாய்ப்பு தளத்தை ஆரம்பிக்கலாமே.
——–(பின்குறிப்பு)
நவுக்ரி பெயர் கொண்ட தளங்களில் உருப்படியாக இருப்பது நவுக்ரிஇந்தியா இணையதளம்.வேலையில்லாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி என்னும் முழக்கத்தோடு செயல்படும் இந்த தளம் வடிவமைபிலும் சரி உள்ளடக்கத்திலும் சரி சிறப்பானதாக இருக்கிறது.மிக எளிமையான வடிவமைப்பு பார்ப்பதற்கு மட்டும் அல்ல பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக உள்ளது.
——-
http://www.naukriforwomen.com/
விலங்குகளுக்கு ஒரு வலைப்பதிவு
விலங்கு பிரியர்கள் இந்த வலைப்பதிவை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் சொக்கிப்போய்விடுவார்கள்.
அப்படி என்ன இதில் விஷேசம் என்று கேட்கிறீர்ளா?
உலகெங்கும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் புதிதாக அவதரிக்கும் விலங்குகள் வருகயை புகைப்படத்துடன் இந்த பதிவு உலகிற்கு அறிவிக்கிறது.அதாவது பூங்கா விலங்குகள் குட்டி போடும்போது அது பற்றிய செய்தியை இப்பதிவு வெளியிடுகிறது.
பொதுவாகவே விலங்கியல் பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றிய செய்தியை அறிந்து கொள்வதில் மக்களுக்கு ஒரு வித ஆர்வம் இருக்கும் அல்லவா? உள்ளூர் பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றிய செய்திகளை உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதும் வாடிக்கை தானே.
சில நேரங்களில் வெளிநாட்டு பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றியும் கூட செய்திகள் வருவதுண்டுதானே.
இப்படியிருக்க ஒரே இடத்தில் இத்தகைய செய்திகளையெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்.
ஜுபர்ன்ஸ் வலைப்பதிவு இதனை தான் செய்கிறது.
சர்வதேச விலங்கியல் பூங்காக்களில் புதிதாக விலங்குகள் பிறக்கும் போது இப்பதிவு உடனடியாக அதனை புகைப்படத்தோடு பதிவு செய்கிறது.அந்த குட்டி பிறந்த விதம், அது எப்படி வளரும் போன்ற சுவையான தகவல்களும் இடம்பெருகின்றன.
உண்மையில் ஒரு சில விலங்குகளின் படங்கள் சொக்க வைக்கின்றன.
விலங்குகள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை இது தூன்டுகிறது.
உலகில் உள்ள முன்ன்ணி விலங்கியல் பூங்காக்களின் பட்டியலும் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை கிளிக் செய்தால் அங்கு பிறந்த குட்டகளை பார்க்கலாம். அந்த பூங்காக்களின் இணைய தளங்க்ளுக்கும் செல்லலாம்.
link;
www.zooborns.com
Subscribe to:
Posts (Atom)