tamilkalangiyam
இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.
Saturday, 16 October 2010
இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் நமது விளையாட்டு வீரர்கள்.
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். அன்றைய சோவியத் யூனியனில் பிரதமராக இருந்த நிக்கோலஸ் புல்கானின் இந்தியாவுக்கு அரசு விருந்தினராக வந்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு மாஸ்கோ திரும்பும்முன் பத்திரிகை நிருபர்கள் அவரைப் பேட்டி கண்டனராம். ""இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்ட உங்களுக்கு எங்கள் நாட்டைப் பற்றி என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது?'' ""நான் ஒரு பொதுவுடமைவாதி. இந்தியாவுக்கு வரும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் வந்தேன். ஆனால் மாஸ்கோ திரும்பும்போது "கடவுள்' பற்றி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்ற பிரதமர் நிக்கோலஸ் புல்கானினின் பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது. ""எங்கள் இந்தியக் கோயில்களையும், புனிதத்தலங்களையும் பார்த்ததால் பக்தி ஏற்பட்டு நீங்கள் ஆத்திகவாதியாக மாறிவிட்டீர்களா?'' என்று நிருபர்கள் அவரை கேலியாகக் கேட்டபோது, பிரதமர் புல்கானின் சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம். ""அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரு தேசம் இயங்குவதற்குத் திறமையும் கொள்கைப் பிடிப்பும் தேசப்பற்றும் தியாக மனப்பான்மையும் உள்ள தலைவர்கள் வேண்டும். நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். முறையான வழிகாட்டுதலும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இல்லாத தலைமையால் ஒரு தேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது. இங்கே உங்கள் இந்தியாவில் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தலைவர்களையும் தவிர வேறு யாருக்குமே அப்படிப்பட்ட உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது என்றால் ஒருவேளை கடவுள் செயலாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். அவ்வளவே!'' பிரதமர் நிக்கோலஸ் புல்கானினின் பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டார்களாம். இது நிஜ சம்பவமா, இல்லை நமது இந்திய மெத்தனத்தை கேலி செய்ய நாமே உருவாக்கிய நகைச்சுவை துணுக்கா என்று தெரியவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைப் பட்டியலைப் பார்த்தபோது எப்போதோ படித்த இந்த நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வந்தது. நிக்கோலஸ் புல்கானின் தெரிந்துகொள்ளாத, காமன்வெல்த் போட்டிகள் நிரூபித்திருக்கும் விஷயம் என்னவென்றால் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் தவறுகளையும் மீறி இந்தியா ஒளிர்வதற்குக் காரணம் நமது மனித வளத்தின் ஆற்றல்தான் என்பது! 1934-ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்ற இந்தியா, 76 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பதக்கப் பட்டியலில் 38 தங்கப் பதக்கங்களையும் 27 வெள்ளிப் பதக்கங்களையும் 36 வெண்கலப் பதக்கங்களையும் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால், பாராட்டு முழுமையாக நமது விளையாட்டு வீரர்களை மட்டுமே சாரும். அடுத்தபடியாக இந்த இளம்வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்த உயர்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர்களைத்தான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. 1966-ல் வெறும் 10 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்த இந்திய விளையாட்டு அணி கடந்த 2006 போட்டிகளில் 49 பதக்கங்களை வெல்ல முடிந்தது. இப்போது 49 என்கிற பதக்க எண்ணிக்கை 101 ஆக அதிகரித்திருப்பதை நாம் கரவொலி எழுப்பி பாராட்ட வேண்டும். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல்முறையாகத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது தட, களப் போட்டிகள்தான். 1958-ல் நடந்த 6-வது காமன்வெல்த் போட்டிகளில் "பறக்கும் சீக்கியர்' என்று பாராட்டப்படும் மில்கா சிங் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அரை நூற்றாண்டுக்குப் பின்னும் நாம் தட, களப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களைத்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஒருகாலத்தில், ஹாக்கி என்று சொன்னால் இந்தியா என்றிருந்த நிலைமைபோய் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டிருக்கிறோம். சர்க்கஸ் கம்பெனிகளில் அற்புத சாகசங்களை நிகழ்த்தும் சிறுமிகள் இந்தியாவில் இருந்தும் நாம் இன்னும் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் திறமையின்மையல்ல. திறமைகள் முறையாகவும் முனைப்பாகவும் அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, உலகத் தரமான வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டு போட்டிகளுக்கு அனுப்பப்படாததுதான். விளையாட்டு என்பதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். பொறியியல் கல்லூரிகளை நிறுவி கணினிப் பொறியாளர்களையும், மருத்துவக் கல்லூரிகளை நிறுவி மருத்துவர்களையும் உருவாக்குவதுபோல, விளையாட்டையும் முன்னுரிமையுள்ள துறையாக நாம் மாற்றியாக வேண்டும். விளையாட்டு வீரர்களுக்குப் பெருமையும், அங்கீகாரமும் வாழ்க்கை வசதிகளும் கிடைக்க உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களும் அதை ஊக்குவிப்பார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலையும் மீறி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது என்னும்போது நிம்மதிப் பெருமூச்சு வருகிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரங்கேற்றிய குளறுபடிகளைப் பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் நமது விளையாட்டு வீரர்கள். அவர்களுக்கு நமது ஆனந்தக் கண்ணீரால் நன்றி செலுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment