பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.
இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே? சென்னையில் கண் பூக்கத் தேடினாலும் சிட்டுக் குருவி தட்டுப்பட மறுக்கிறது. அன்றைக்கு உலக சிட்டுக் குருவி தினம் என்று மீடியாவில் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொடியன் மொட்டை மாடியில் அரிசி வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். மீதி இருக்கும் குருவிகள் எங்கிருந்தாலும் இதைத் தந்தி போல் பாவித்து உடனே வேளச்சேரிக்கு வரவும்.
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையே அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்தவரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக் கும் பிடிபடவில்லை.
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ். அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித் தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு!
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன்கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்கள் பங்கு பற்றிப் பார்க்கவேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன்முதலில் அமெரிக்கா வுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்த புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்த போது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங் குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை. குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற்புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்த போது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணை கள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக் காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரியதான போது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்தது தான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக் கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள் அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா.... இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலைவிதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக் கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள்! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக் கொண்டு ஊர்ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப்பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்து கொண்டார் கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார் கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின் றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடுகிறது என்ப தற்கும் பல ஆராய்ச்சி முடிவு கள் சாட்சி இருக்கின்றன. அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள் கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்து களின் மிச்சங்களும் அதில், காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை!
மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான், ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத் தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.
No comments:
Post a Comment