ஆனால், அது மட்டுமல்ல அவர்களது சோகம்.
இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கானா பகுதியில் 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதில் மிகக் கொடுமையான நெஞ்சை உலுக்கும் விஷயம், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் சராசரி வயது 32.
தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ‘இன்று வெயில் அதிகம்’ என்பதுபோல ஆந்திராவில், விவசாயிகள் தற்கொலை சகஜமாகி விட்டது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் வீட்டுப் பெண்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் வெள்ளந்தியாய் இருப்பதைப் பார்த்தால், இனம் புரியாத சோகம் மனதைப் பிசைகிறது.
ஒருவாரம் முன்புதான் வயலில் கணவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும், தன்னைப் பார்க்க வீடு தேடி வந்தவர்களுக்கு, தரையில் பாய் விரித்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்த கையோடு கன்னத்தில் கை வைத்து குத்துக்காலிட்டு அமர்ந்து, சோகம் படர்ந்த முகத்தோடு வைத்த கண் வாங்காமல் வாஞ்சையோடு பார்க்கிறார் ஆண்டாள்.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், "செப்பக்கா! எல்லா ஜரிஹிந்தி இல்லா?" (அக்கா! சொல்லு, எப்படி நடந்தது இப்படி?) என்றால், ஒன்றிரண்டு இந்தி வார்த்தைகள் கலந்த தெலுங்கில் மெதுவாகப் பேசுகிறார்: "ரெண்டு, மூணு வருஷமாவே சரியா மழை இல்லை. விதை, உரம் வாங்கினதுல ஒரு லட்சம் கடன் ஆயிடுச்சி. கட்ட முடியல. மாசம் 2,400 ரூபாய் வட்டிக்கு வெளியில கடன் வாங்கி, பருத்தி போட்டாரு. எப்படியும் நல்ல விளைச்சல் கிடைக்கும், கடன் கட்டிடலாம்னு நினைச்சாரு. இந்த வருஷமும் மழை இல்லாம விளைச்சல் இல்ல. வட்டியோட சேர்த்து 3 லட்சம் ஆயிடுச்சி. வீட்ல இருக்குற சாமான் எல்லாம் அடமானத்துல இருக்கு. அடுத்த பருவத்துல எப்படி விதைக்க? கடன் கொடுத்தவங்களுக்கு என்ன சொல்ல? சரியா விளையாத, கருகின பருத்தி செடியைப் பார்த்துப் பார்த்து மனசு குமுறிக்கிட்டே இருந்தவரு, திடீர்னு உயிரைப் போக்கிட்டாரு" என்கிறார்.
பொதுவாக அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்களும் ஆந்திராவில் விவசாய அறுவடை காலம். கடந்த 10 ஆண்டுகளாக பயிர்கள் அறுவடையைவிட அதிகம் நடப்பது விவசாயிகள் தற்கொலை. பத்து ஆண்டுகளாக, மெதெக், ரங்கா ரெட்டி, மெகபூப் நகர், கம்மம், நல்கொண்டா, கரீம் நகர், அதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் என்று ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் (தெலுங்கானா) தொடர்ந்து இப்படி ஓர் அவலம் நடப்பதற்கு என்ன காரணம்? ஏன் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
சுஸ்திரா விவசாய கேந்திரம் (Centre for sustainable agriculture) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், விவசாயிகளின் மறுவாழ்விற்காக கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்கிறது. இதன் நிறுவனர்களில் ஒருவரான ரவி கன்னேகந்தி கூறும்போது, "காவிரி டெல்டா பகுதியில் ஒரு ஏக்கர் பயிரிட 12 ஆயிரம் செலவு பிடிக்கும் என்றால், அதே அளவு நிலம் பயிர் செய்ய கோதாவரியில் 28 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும். இந்தச் செலவை சமாளிக்க முடியாமல் கடந்த ஆண்டு, கிழக்கு கோதாவரிப் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை எந்த விவசாயியும் பயிர் செய்யாமல், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதுபோல, பயிர் விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். அப்படியும் அரசு கண்டு கொள்ளவில்லை.
மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலையை 1,030 ரூபாய் என்று நிர்ணயம் செய்தது. இதைவிட ஆயிரம் ரூபாய் அதிகம் விலை இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தியபோதும் கொள்முதல் விலையை உயர்த்தினால் பொதுச் சந்தையில் அரிசி விலை அதிகமாகும் என்று காரணம் சொல்லி, கடைசியாக 1,110 ரூபாய் என்று மத்திய அரசு விலை கொடுத்தது. ஒரு ஏக்கரில் 10 குவிண்டால் விளைந்தால், இந்த விலைக்கு விற்கும்போது உற்பத்தி செய்த செலவில் 50 சதவீதம்கூட விவசாயிக்கு கிடைக்காது" என்கிறார்.
ஆந்திராவில் உள்ள 23 மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. இதில், 70 சதவீத விவசாயிகள் கிராமங்களையே நம்பி இருப்பவர்கள். அதிலும் 30 சதவீதம் பேர், சொந்த நிலம் இல்லாமல் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிர் செய்பவர்கள். இரண்டு கோடி ஏக்கரில் 50 சதவீதம் நெல்லும் பருத்தியும், 20 சதவீதம் நிலக்கடலை, மீதி நிலத்தில் பருப்பு, சூரியகாந்தி என்று பிற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட (BT COTTON) விதைகளைத்தான் ஆந்திராவில் 99 சதவீதம் கடந்த 20 ஆண்டுகளாக பயிர் செய்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ (MANSANTO) இந்த விதைகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இந்த பருத்திப் பயிரை போல்வார்ம் (BOLWARM) என்ற பூச்சி தாக்காது, ஏக்கருக்கு அதிகபட்சமாக 15 குவிண்டால் மகசூல் கிடைக்கும் என்று சொல்லி, வேறு நாட்டுவிதைகளே (country seeds) இல்லாமல் செய்து விட்டார்கள்.
தற்கொலை செய்துகொண்ட பிட்ல சீனிவாசின் மனைவி பத்மா சொன்னார்; "அப்பா விவசாயம் செய்தபோது பருத்தி விதைகளை தனியாக எடுத்து, சாண நீர் தெளித்து, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைப்பார்கள். அந்த விதைகளை அடுத்த வருடம் விதைப் பருத்தியாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான் குழந்தையாக இருந்த நாளில் பார்த்திருக்கிறேன். என் கணவர் விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு, பிடி விதைகள்தான். இது ஒருமுறை மட்டுமே பயன்படும். அடுத்த வருஷம் புதிதாகவே வாங்க வேண்டும். எனக்குத் தெரிந்து இந்த 15 ஆண்டுகளில் ஒரு முறைகூட ஏக்கருக்கு 15 குவிண்டால் விளைந்ததில்லை. நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. மருந்தும் தெளிக்க வேண்டும். விதை, உரம், மருந்து எல்லாம் விற்பனையாளர்களிடம் இருந்து கடனுக்கே வாங்குவோம். விளைந்தால், மகசூல் மொத்தத்தையும் அவர்களே எடுத்துப் போய்விடுவார்கள். விளைச்சல் இல்லையென்றால், சாவதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார் விரக்தியுடன்.
நாட்டு விதைகள் என்றால், நீர்ப் பற்றாக்குறையால் காந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மழை பெய்தால் திரும்பவும் தழைத்துவிடும். ஆனால், பிடி பருத்தி ஒருமுறை காய்ந்தால் அவ்வளவுதான் என்கிறார்கள் வேளாண் துறையினர்.
விவசாயமே ஆதாரமாக இருக்கும் பிராந்தியத்தில் திருஷ்டிக்குக்கூட ஒரு மாடு, கலப்பை கண்ணில் படவில்லை. கேட்டால், மேய்ச்சல் நிலமும் நீரும் இல்லாமல் எப்படி அவற்றைப் பராமரிப்பது என்று திருப்பிக் கேட்கிறார்கள். சரி, நிலத்தை எப்படி உழுவது? ஒரு மணி நேரத்திற்கு 700 ரூபாய் கொடுத்து எடுத்த வாடகை டிராக்டரைக் கொண்டு உழுகிறார்கள்.
"90 சதவீதம் நிலக்கடலைப் பயிர் செய்த அனந்தபுரம் மாவட்டம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று சொல்லும் சித்திப்பேட்டையைச் சேர்ந்த கொண்டலு, "சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஐ.டி., தொழில்துறை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவித்தார். அடுத்து வந்த ராஜசேகரரெட்டி, விவசாயத்திற்கு நிறைய செய்யப் போவதாக ஒரு மாயை இருந்தது. என்ன செய்தாரோ, எந்தத் திட்டமும் வறட்சியான தெலுங்கானா மாவட்டங்களுக்கு வரவில்லை.
வீடு இல்லாதவர்களுக்கு இந்திரம்மா நினைவுக் குடியிருப்பு என்றார். வெறும் 35 ஆயிரம் ரூபாய் அரசு தரும் இந்தத் தொகையில் ஒரு வீட்டைக் கட்டுவது சாத்தியமா? ஆனால், பணத்தைப் பெற்றவர்கள வீடு கட்டியே தீர வேண்டும். ஒரு லட்சம், 2 லட்சம் என்று கடன் வாங்கி கட்டிவிட்டு, கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு. இது இப்படி என்றால், எவ்வளவு மழை, என்ன பயிர் செய்யலாம் போன்ற அனைத்து விவரங்களையும் விவசாயிகளுக்கு சொல்வதற்காக அதிகாரி ஒருவரை, விவசாயத்துறையின் மூலம் நியமிக்க வேண்டும் என்பது அரசு விதி. ஆந்திராவில் 27 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. 3 ஆயிரம் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.
எந்த சூரிட்டியும் இல்லாமல் விவசாயக் கடன் ஒரு லட்சம் வரை தரலாம் என்று ரிசர்வ் வங்கி சொன்னாலும் ஆந்திராவில், வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தராது. 20 சதவீத விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைத்தாலே பெரிய விஷயம் என்பதால், மற்றவர்கள் தனியாரிடம் வாங்குகிறார்கள். இவர்களும் மருந்து, உர உற்பத்தியாளர்களிடமே வாங்குவார்கள். அதனால், பயிர்களுக்கான விலையை நிர்ணயம் செய்வதும் உரத் தயாரிப்பு, விற்பனை நிறுவனங்களே. 27 லட்சம் சிறு குறு விவசாயிகளுக்கு - வங்கிக் கடன் பெறுவதற்கான தகுதி அட்டைகள் தருவதாக அரசு அறிவித்தது. ஆனால், வெறும் ஐந்து லட்சம் பேருக்குத்தான் கொடுத்தார்கள். அதிலும் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடன் கிடைத்தது.
பஞ்சாப்பிற்கு அடுத்தபடி கலப்பின விதைகளும், அதன் காரணமாக அதிகம் உரம், பூச்சிக் கொல்லிக் மருந்துகளும் பயன்படுத்தப்படுவது ஆந்திராவில்தான். விவசாயக் கடன் கிடையாது. தண்ணீர் இல்லை, விலையை உர கம்பெனி நிர்ணயிக்கும். மின்சாரம் தொடர்ந்து 3 மணி நேரம்கூட இருக்காது. தரமான விதை கிடையாது. விவசாயத்திற்கு ஆதாரமான எதுவும் இல்லாமல் வேறு எதுவும் தெரியாத விவசாயி என்ன செய்வான்?" மூச்சு விடாமல் பேசுகிறார் கொண்டலு.
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் கூடவா அரசு உதவக் கூடாது? கரீம்நகர் முத்தாரம் மண்டல் மைதாம்பண்டா கிராமப் பஞ்சாயத்து அலுவலர் ஒருவர் கொடுத்த தகவல்கள்:
"ஹைதராபாத் தவிர, தெலுங்கானா மொத்தமும் வறட்சிதான். விளைச்சல் பொய்த்து விட்டதாலே ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நிரூபிப்பதற்குள்ளாகவே அந்தக் குடும்பம் ஒரு வழியாகிவிடும். பஞ்சநாமா (உள்ளூர் ஆதாரம்), முதல் தகவல் அறிக்கை, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், கடன் வாங்கியதற்கான ஆதாரம், நிலப் பட்டா என்று 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒன்றில் சந்தேகம் என்றாலும் அரசு எந்த உதவியும் செய்யாது. தனியாரிடம் கடன் வாங்கிய விவசாயியிடம் என்ன ஆதாரம் இருக்கும்? நிலங்கள் பெரும்பாலும் மூன்று தலைமுறைகளுக்கு முன் இருந்தவர்களின் பெயரிலேயே இன்னமும் இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயரில் இருக்காது. அப்படியே இந்த 13 ஆவணங்களைக் கொடுத்தாலும் குடும்பத்திற்கு ஒரு லட்சமும், கடனுக்காக 50 ஆயிரமும் தருவார்கள். கடன் கொடுத்தவர்களை அழைத்து, ‘இனி எப்போதும் இந்தக் குடும்பத்தை பணம் கேட்டுத் தொல்லை செய்யக் கூடாது’ என்று சத்தியம் வாங்குவார்கள். அதிகாரிகளிடம் சரி என்று சொல்லுபவர்கள், மீதிப் பணத்தைக் கேட்டுப் பிறகு மிரட்டுவார்கள்.
இதுதவிர இந்திரம்மா நினைவுக் குடியிருப்பு ஒன்று, விதவைகள் பென்ஷன் இரண்டும் 98ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தர வேண்டும் என்று தில்லிப் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஜெயந்தி கோஷ் தலைமையிலான 10 உறுப்பினர் குழு அரசுக்கு சிபாரிசு செய்தது. எதுவும் நடைமுறையில் இல்லை"என்கிறார் பெருமூச்சுடன்.
தண்ணீர்தானே பிரச்சினையாக இருக்கிறது. இதை சரி செய்தால் எப்படியும் பயிர்களைக் காப்பாற்றி, கவுரவமாக வாழலாம் என்ற நப்பாசையில் ஒரு முறைக்கு மூன்று முறைகூட தங்கள் நிலத்தில், வேறு வேறு இடத்தில் போர்வெல் போடுகிறார்கள். பூமிக்கடியில் நீர் இருந்தால்தானே போர்வெல்லில் வருவதற்கு? ஒவ்வொரு முறையும் லட்ச ரூபாய் செலவு செய்துவிட்டு, ஏமாற்றத்தில் அங்கேயே மருந்து குடித்து இறந்து போகிறார்கள் விவசாயிகள். கிருஷ்ணா, கோதாவரி என்று இரண்டு ஜீவ நதிகள் இருக்கின்றன தெலுங்கானாவில். ஆனால்,அவற்றிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பலனையும் அனுபவிக்காமல், தற்கொலை மட்டுமே சாபமாகிப்போயிருக்கிறது தெலுங்கானா விவசாயிகளுக்கு.
வயலிலேயே முடிந்த வாழ்வு
நவம்பர்-4 : ராஜூ ரெட்டி (32)
சின்ன குண்டலவெல்லி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாளின் (24) கணவர், ராஜு ரெட்டி. வயது 32. ஐந்து ஏக்கரில் மிளகாய், மூன்று ஏக்கரில் பருத்தி பயிரிட்டிருந்தார்கள். அக்டோபர், நவம்பர் அறுவடைக் காலம் என்பதால், வழக்கம் போல விடியற்காலையிலேயே எழுந்து, பருத்திக் காட்டிற்குப் போய்விட்டார். ஊடு பயிராகத் தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ் என்று காய்கறிகளும் பயிரிட்டிருந்தார். பக்கத்து ஊரில் 9வது படிக்கும் மகன் கிஷோரையும் 6வது படிக்கும் மகள் கீர்த்தனாவையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ராஜு ரெட்டிக்கு கஞ்சி எடுத்துக்கொண்டு வயலுக்குப் போனார் ஆண்டாள். வழக்கம்போல அவர் உட்கார்ந்து கஞ்சி குடிக்கும் மரத்தடியில் போனவருக்கு, தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது. அங்கே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் ராஜு ரெட்டி.
அக்டோபர் 6: பிட்ல சீனிவாஸ் (33)
சின்ன குண்டவெல்லியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சிந்தா மடகா கிராமம். அரசு கொடுத்த 35 ஆயிரம் நிதி உதவியுடன் மேலும் ஒரு லட்ச ரூபாய் வெளியில் கடன் வாங்கிக் கட்டப்பட்ட இந்திரம்மா நினைவுக் குடியிருப்பில் மம்தா, சுஜாதா, அஸிதா என்ற மூன்று பெண் குழந்தைகளுடன் வசிக்கிறார் இதய நோயாளியான 24 வயது பத்மா. இனி என்ன செய்வது என்று புரியாமல் முறத்தை மடியில் வைத்து பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் 33 வயது பிட்ல சீனிவாஸ் 4 ஏக்கர் சோந்த நிலம், குத்தகைக்கு எடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி, மக்காசோளம், நெல், பப்பாளி என்று தலா 2 ஏக்கர் பயிரிட்டிருந்தார். கடந்த அக்டோபர் 6ம் தேதி காலை, பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து வயலிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
அக்டோபர் 16: ஊதரி போசாலு (30)
கரீம் நகர் மாவட்டத்தில் உள்ளது, சர்வாரம் கிராமம். தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல்லும் குத்தகைக்கு எடுத்த இரண்டரை ஏக்கரில் பருத்தியும் பயிரிட்டிருந்தார் ஊதரி போசாலு (30). மனைவி ஸ்வரூபா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். 10 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறார். கடந்த அக்டோபர் 16ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, வயலிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 6: கொர்லா ஜலயா (30)
ஓதெல்லா வருவாய் மண்டலத்தில் உள்ளது, மடக்கா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கொர்லா ஐலய்யாவிற்கு 30 வயது. மனைவி வசந்தா. 5 வயதில் ஒரு மகள். ஒரு ஏக்கர் சோந்த நிலத்திலும் குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் நிலத்திலும் பருத்தியும் நெல்லும் பயிரிட்டிருந்தார். தந்தைக்குப் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாகவே இவர்தான் விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் வயலுக்குப் போனவர், அங்கேயே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து இறந்து போனார்.
எர்ர பெல்லி லிங்காராவ் (35)
35 வயது எர்ர பெல்லி லிங்காராவ், தனது 4 ஏக்கர் சொந்த நிலத்தில் நெல்லும், குத்தகைக்கு எடுத்த 3 ஏக்கர் நிலத்தில் பருத்தியும் பயிரிட்டார். பிடி காட்டன் (bt cotton) எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியைத்தான் போட்டிருந்தார். ஆனால், பருத்தியையும் நெல்லையும் அறுவடை செய்யவில்லை. மருந்து குடித்து இறந்து போனார். விவசாயத்தைப் பற்றியோ, தினமும் என்ன செய்கிறார் என்பதையோ தன்னிடம் எதுவும் பேசியதேயில்லை என்பதோடு, ஏன் இப்படி செய்துகொண்டார் என்று புரியாமல், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார் அவரின் மனைவி கவிதா.
No comments:
Post a Comment