tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Saturday, 3 December 2011

திருப்பூர் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான உடல்நலப் பரிசோதனை ; திடுகிடும் தகவல்

இந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான உடல்நலப் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் நாளன்று ஒரு பள்ளியில் 411 மாணவர்களிடம் சோதனை நடத்தியதில் 99 பேருக்கு தோல்நோய் பிரச்னைகள் இருந்தன. 65 பேருக்கு பற்களில் பிரச்னை. 41 பேருக்கு உடலில் சக்தியில்லை- வைட்டமின் பற்றாக்குறை. இது தவிர, கண்பார்வை மற்றும் காதுகேட்புத் திறன், காசநோய்த் தொற்று போன்றவற்றுக்காக சிறப்பு மருத்துவப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 25 மாணவர்கள்.அரசுப் பள்ளிகள் எல்லாவற்றிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் விதிவிலக்காக சில ஊர்களில் சில பள்ளிகள் இருக்கக்கூடும். இருப்பினும் பொதுவான நிலைமையில் மாற்றம் இருக்காது. தமிழகத்தில், பள்ளிச் சிறார் நலவாழ்வுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்காக தனியாக அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு மருத்துவக் குழு அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் அனைத்து மாணவர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகள் செய்கிறார்கள் என்று தலைமையாசிரியர்கள் சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் இது குறித்து மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் மாணவர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியது இவ்வளவுதான்: "பள்ளிக்கூடம் தொடங்கியபோது வந்தார்கள். உடம்பை சோதித்தார்கள். சத்து மாத்திரை கொடுத்தார்கள்'.இதுதான் உண்மையும்கூட. இந்த மருத்துவக் குழு, மாணவர்களின் பொதுவான உடல்நலம் குறித்து மேலோட்டமான மதிப்பீடு செய்வதோடு, கொஞ்சம் வைட்டமின் மாத்திரைகள் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த மருத்துவப் பரிசோதனை பெயரளவில் நடந்துகொண்டிருக்கிறது. சிறப்பு மருத்துவர்கள் இக்குழுவில் வருவதே இல்லை. அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் வருவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பள்ளிகளில் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் அல்லது உதவி மருத்துவர்கள் குழு, மாணவர்களுக்கு உள்ள பார்வைக் குறைபாடு, கேட்புத்திறன் குறைவு, பற்சொத்தை, இதயத்தில் ஓட்டை என்று கணிக்க முடிந்தால், அவர்களை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் அந்த சிறப்பு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றாரா என்பதை விசாரிக்கும் தொடர்-கண்காணிப்பு எந்தப் பள்ளியிலும் இல்லை.இத்தகைய சிறப்பு மருத்துவப் பிரிவுகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே உள்ளன. ஊரகப் பகுதியில் இருக்கும் ஒரு மாணவர் இந்த மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றால், தனது பெற்றோருடன் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் வர முடியும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை எந்த சிறப்பு மருத்துவரும் பணிக்கு வருவதில்லை. தனியார் மருத்துவமனையிலேயே இந்தப் பிரச்னை என்றால், அரசு மருத்துவமனைகள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை. வார நாள்களில் வந்தாலும், இவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.சிறப்பு மருத்துவம் தேவை எனப் பரிந்துரைக்கப்படும் மாணவர்களுக்கு மட்டுமாகிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தி, இந்த மாணவர்கள் வந்தவுடன் அவர்களுக்கான அனைத்து பரிசோதனைகளையும் நடத்தி, ஆலோசனை மற்றும் மாத்திரை மருந்துகளை வழங்கி அனுப்பும் நடைமுறை இருக்குமானால்கூட, இந்த மாணவர்களை பள்ளி வேலை நாளிலேயே பள்ளி தனது செலவில் அனுப்பி வைத்து, மாணவர்கள் பயன்பெறச் செய்ய முடியும்.மாணவர்களுக்காக விளையாட்டு, உடல்நலன், அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட சிறு செலவினங்களுக்காக நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.29-ம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒருவருக்கு ரூ.41-ம் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.102 அரசினால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியிலிருந்து மருத்துவத்துக்காக என்று தனியாக மூன்று பிரிவுகளுக்கும் முறையே ரூ.1, ரூ.1.50, ரூ.2 ஒதுக்கப்படுகிறது. இத்தொகை நேரடியாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுவிடுகிறது. இந்தத் தொகை அந்தந்தப் பள்ளிக்காக ஒதுக்கினாலும்கூட, சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மாணவர்களின் சிறு செலவுகளுக்குப் பயன்படும்.மேலும், பள்ளிச் சிறார் நலவாழ்வுத் திட்டத்தை ஏன் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்குபோய்ச் சேர்ந்தவர்களே தவிர, அனைவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர்தான். மேலும், தற்போது 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில், இத்தகைய மருத்துவப் பரிசோதனையை தனியார் பள்ளிகளுக்கும் நீட்டிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. சத்துணவு வழங்குவதும்கூட அவசியம். இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளை அந்தப் பகுதியில் உள்ள அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் செய்யப்படுமேயானால், மேலும் சிறப்பாகச் செய்ய முடியும். இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏழை மாணவர்களுக்குத் தேவைப்படும் கண்-கண்ணாடி, காதொலி கருவி, அல்லது மருந்து மாத்திரைகள் வாங்கித் தருவதில் உதவி செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. சிறப்பு மருத்துவம் தேவைப்படும் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலைமையை மாற்றி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதியை உருவாக்குவது அரசின் கடமை.அரசு ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்கிறது. அதைச் சிறப்பாக செயல்படுத்தவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமும் மருத்துவத் துறையிடமும் இருக்கிறது. தற்போதைய நிலையில் இத்திட்டம் பெயரளவில் வெறுமனே, கடனுக்குச் செய்யப்படுகிறது என்பதே உண்மை. இந்தத் திட்டத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment