சென்னிமலை: நொய்யல் ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைப்
பயன்படுத்தி, திருப்பூர் சாயப் பட்டறைகள், சாயக் கழிவை வெளியேற்றுவதால்,
அணை நீரின் உப்புத் தன்மை, மிகவும் அதிக அளவாக உள்ளது.
திருப்பூர் நகர் வழியே ஓடிவரும் நொய்யலாறு, அங்குள்ள சாயப் பட்டறை
கழிவால், பயன்படுத்த முடியாத ஆறாக மாறிவிட்டது. திருப்பூரில் இருந்து, 35
கி.மீ., தொலைவில், ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும்
மாசுபட்டது. ஐகோர்ட் தலையீட்டால், அணைப் பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு
நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால், நவ., 7ம் தேதி திருப்பூரில் ஏற்பட்ட
வெள்ளத்தால், 15க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேலும், 15 ஆயிரம் கன
அடிக்கு மேல் வெளியான வெள்ளம், ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியது. ஐகோர்ட்
உத்தரவின்படி, தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, கொடுமுடி அருகே
காவிரியில் கலந்தது. தற்போது அணைக்கு, 1,000 கன அடி தண்ணீர் வருகிறது.
நீர்மட்டம், 19 அடியாக உள்ளது. இவ்வளவு வெள்ளம் வந்த போதும், அணையில்
தேங்கியுள்ள தண்ணீரின் நச்சு உப்புத் தன்மை குறையவில்லை. சாதாரணமாக, 200
டி.டி.எஸ்., வரை உப்புத் தன்மை கொண்ட தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம்.
அதற்கு மேல் அதிகரிக்கும் உப்பு த்தண்ணீர் எதற்கும் பயன்படாது. அதற்கான
அளவீட்டை, "டி.டி.எஸ்' என்பர். தற்போது, ஒரத்துப்பாளையம் அணையில்
தேங்கியுள்ள தண்ணீரில், 1,000 டி.டி.எஸ்., உப்பு உள்ளது. வெள்ளத்தை
பயன்படுத்தி, திருப்பூர் சாயப் பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல்
வெளியேற்றியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருப்பூர் பகுதியில்
இருந்து அடித்து வரப்பட்ட குப்பை, பாலித்தீன் கவர்கள் மலை மலையாக அணைக்குள்
தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை ஜே.இ., வடிவேல் கூறியதாவது: அணைக்கு
வரும் நீர் அளவு, உப்புத் தன்மையை ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிடுகிறோம்.
மழைநீருடன், திருப்பூர் பகுதி சாயக் கழிவுநீரும், சாக்கடை நீரும் கலந்து
அணைக்கு வந்து விட்டது. அணையில் துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளம் அதிகமாக
வந்த போதே, 1,000 டி.டி.எஸ்., உப்புத் தன்மை இருந்தது. தற்போது நீர் வரத்து
குறையக் குறைய, டி.டி.எஸ்., அளவு அதிகரிக்கத் துவங்கி விட்டது. தற்போது,
1,300 வரை டி.டி.எஸ்., உள்ளது. இது விவசாயத்துக்கும், குடிப்பற்கும் ஏற்றது
அல்ல. அதனால், அணை நீரையும், நொய்யல் ஆற்று நீரையும் யாரும் குடிக்கவோ,
விவசாயத்திற்கோ பயன்படுத்த வேண்டாம் என, கிராமங்களில் அறிவித்துள்ளோம்.
நொய்யல் கரையோரம் தேங்கிக் கிடக்கும் பாலித்தீன் கவர்களை அப்புறப்படுத்தி
வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment