குழந்தைகளுக்கான தரமான,பாதுகாப்பான தளங்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தாராளமாக இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தை உருவாக்கியிருப்பதும் ஒரு பெற்றோரே.அந்த வகையில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் அமைத்த தளம் என்றும் சொல்லலாம்.
லண்டனை சேர்ந்த லிசா ஸ்வர்லிங் மற்றும் ரால்ப் லேசர் தம்பதி இந்த தளத்தை உருவாக்கியுள்ளவர்கள்.இருவரும் எழுத்திலும் வரைகலையிலும் ஆர்வம் கொண்டவர்களாம்.இணையதள வடிவமைப்பிலும் திறன் மிக்கவர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் ஆப்பிரிக்காவில் உள்ள கலகாரி பாலைவனப்பகுதியில் சுற்றுலா சென்றூள்ளனர்.அப்போது போஸ்ட்வானாவில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு சென்று கொண்டிருந்தனர்.நீண்ட நெடிய பயணம் தான்.
லிசா தம்பதியினர் பாலைவனத்தின் அழகை ரசித்தபடி பயணத்தில் லயித்திருந்தனர்.ஆனால் அவர்களின் மகள்களுக்கு இந்த பயணம் கொஞ்சம் போரடிக்கவே செய்த்திருக்கிறது.இது இயல்பு தானே.
அப்போது எட்டு வயதான மூத்த பெண் ஆறு வயதான தனதும் தங்கைக்கு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.யூடியூப் தலைமுறை அல்லவா?அதனால் பெரியவள் நேராக கதை சொல்லாமல் கையில் இருந்த ஐபோன் வழியே கதை சொல்லிருக்கிறாள்.அதவது கதை புத்தகத்தை பார்த்து படித்தபடி ஐபோன் காமிரா மூலம் அதனை படம் பிடித்து பின்னர் தான் கதை சொல்லும் வீடியோ காட்சியை தங்கைக்கு காண்பித்திருக்கிறாள்.
அதை பார்த்த தங்கை சொக்கிப்போய்விட்டாள்.அதன் பிறகு மணிக்ககணக்கில்
இருவரும் கதைசொல்லி கதை கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். இரண்டு சிறுமிகளுக்கும் நேரம் போனதே தெரியாமல் இந்த பாலைவன பயணம் இனிதாக அமைந்தது.
இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த லிசா தம்பதி பிள்ளைகள் இப்படி தங்களுக்குள் லயித்திருந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.பிள்ளைகள் அவர்களை தொல்லை படுத்தாமல் இருந்தது ஒரு காரணம். அதோடு அக்கா தங்கைகள் இருவரும் தங்களை மறந்து கதையுலகில் சஞ்சாரம் செய்து மகிழ்ந்ததும் லிசா தம்பதிக்கு மகிழ்ச்சியை அளித்தது.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் போது இருவரும் கதை புத்தகங்களை படிப்பதிலும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் யூடியூப்பில் வீடியோ பார்ப்பதிலும் மூழ்கி விடுவார்கள்.
பிள்ளைகளின் இந்த பழக்கத்தை அறிந்திருந்த லிசாவுக்கு அவர்களின் முகத்தில் மின்னிய ஆனந்ததை கண்டதும் ஒரு அருமையான யோசனை மின்னியது.இதே போல குழந்தைகள் சொல்லும் கதைகளை வீடியோ காட்சியாக்கி அவற்றை ஒரு இண்டெர்நெட் மூலம் காணச்செய்தால் எப்படி இருக்கும்?என்பது தான் அந்த எண்ணம்.
அதாவது எங்கள் பிள்ளைகள் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகத்து குழந்தைகள் என நினத்தார்.
இப்படி பிறந்தது தான் குழந்தைகளூக்கான கதை சொல்லும் ஸ்மோரிஸ் இணையதளம்.
குழந்தைகளூக்காக குழந்தைகள் படிக்கும் கதைகள் என்னும் வாசகத்தோடு இந்த தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் வீடியோவில் சொல்லும் கதைகளை இடம்பெற வைத்தனர்.கதை கேட்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோ கதைகளை பார்த்து கேடு ரசிக்கலாம்.விருப்பபட்டால் அவர்களும் தங்கள் பங்குக்கு கதை சொல்லி அந்த விடியோவை சமர்பிக்கலாம்.
ஆரம்பத்தில் கதைகளை சமர்பிக்க போட்டி ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம்.கதை சொல்ல 16 வயது நிரம்பியிருக்க வேண்டும்.சொல்லும் கதை சின்னதாக 3 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் மட்டும் தான் கதை சொல்ல வேண்டும்.கதைப்படல்களையும் சமர்பிக்கலாம்.
சமர்பிக்கப்படும் கதைகள் அழகாக பிள்ளைகளின் புகப்படங்களோடு வரிசையாக இடம்பெறுகின்றன.அவற்றின் மீது கிளிக் செய்தால் முதலில் சிறு அறிமுக குறிப்பு தோன்றுகிறது.தொடர்ந்து கிளிக் செய்தால் கதை கேட்கலாம்.
நிச்சயமாக குழந்தைகள் சொல்லும் இந்த கதைகளை குழந்தைகள் ரசித்து மகிழ்வார்கள்.
முகப்பு பக்கத்தில் சிரித்துகொண்டிருக்கும் மழலைகளின் முகத்தை பார்த்தாலே கதை கேட்கும் ஆவல் பிறக்கிறது.மாதந்தோறும் 50 புதிய கதைகள் என்னும் வேகத்தில் இந்த தளம் வளர்ந்து வருகிறது.கதை சொல்லவதற்கான ஆலோசனை மற்றும் பெற்றோர்களுக்கான விளக்கப்பகுதியும் இடம் பெற்றுள்ளது.ஐபோனில் கேட்கும் வசதியும் உண்டு.
————————–
http://www.smories.com/
No comments:
Post a Comment